< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கொடைரோட்டில் ஓடும் ரெயிலில் துப்பாக்கியை காட்டி பயணிகளிடம் மிரட்டல்; கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது

தினத்தந்தி
|
4 Oct 2023 7:51 PM GMT

கொடைரோடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் துப்பாக்கியை காட்டி பயணிகளை மிரட்டிய கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொடைரோடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் துப்பாக்கியை காட்டி பயணிகளை மிரட்டிய கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பயணிகள் ரெயில்

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் இந்த ரெயிலில் தான் பயணம் செய்கின்றனர். ரெயில் நிலைய புதுப்பிப்பு பணி காரணமாக நேற்று இந்த ரெயில் கோவில்பட்டி வரையே இயக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு பாலக்காட்டில் இருந்து ரெயில் புறப்பட்டது.

பின்னர் காலை 8.15 மணிக்கு பழனி வந்த இந்த ரெயில் 9.20 மணிக்கு திண்டுக்கல்லை அடைந்தது. அதுவரை அந்த ரெயிலில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பயணம் செய்தவர்களுக்கு அடுத்த அரை மணி நேரத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரெயில் கொடைரோடு ரெயில் நிலையத்தை காலை 10 மணிக்கு அடைந்தது.

துப்பாக்கியை காட்டி மிரட்டல்

கொடைரோடு ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் அந்த ரெயில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் இருந்து பயணிகள் இறங்கியதும், சில நிமிடங்களில் அந்த ரெயில் மதுரை நோக்கி மெதுவாக புறப்பட்டது. ரெயிலின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அப்போது என்ஜினில் இருந்து 2-வது பெட்டியில் இருந்த பயணிகள் திடீரென அலறி கூச்சல் போட்டபடியே இங்கும், அங்கும் ஓடினர்.

இதைப்பார்த்த ரெயில்வே போலீசார் ஒன்றும் புரியாமல் அந்த பெட்டியை நோக்கி ஓடினர். ஆனால் அதற்குள் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் ரெயில் நிலைய நடைமேடையை கடந்து சிறிது தூரம் சென்று ரெயில் நின்றது. அப்போது கையில் துப்பாக்கியுடன் ஒரு வாலிபர் ரெயிலைவிட்டு இறங்கி 3-வது நடைமேடையை நோக்கி ஓடினார். அவரை பின்தொடர்ந்து இறங்கிய மேலும் 3 வாலிபர்கள் தங்களின் உடைமைகளுடன் ஓடினர்.

மடக்கி பிடித்தனர்

இதைப்பார்த்து நடைமேடையில் காத்திருந்த பயணிகள் 4 பேரையும் பிடிக்க முயன்றனர். இதற்கிடையே அங்கு விரைந்து வந்த கொடைரோடு ரெயில்வே போலீசார் 4 பேரையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை ரெயில் நிலைய நடைமேடையில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், சப் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா ஆகியோர் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

பின்னர் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார், கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் பிடிபட்டவர்களிடம் இருந்த துப்பாக்கியை வாங்கி சோதனையிட்டனர். அப்போது அது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. அதன் பிறகு தான் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கேரளாவை சேர்ந்தவர்கள்

பின்னர் 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அப்துல் ராசிக் (வயது 23), (இவரிடம் தான் பொம்மை துப்பாக்கி இருந்தது), மலப்புரத்தை சேர்ந்த அமீன் செரிப் (19), காசர்கோடுவை அடுத்த சித்தாக்கோடியை சேர்ந்த முகமது சின்னான் (20), பாலக்காட்டை சேர்ந்த சப்பல்சா (19) என்பது தெரியவந்தது.

மேலும் அப்துல் ராசிக் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பொம்மை துப்பாக்கியை எடுத்து பயணிகளிடம் பணம், நகை கேட்டு மிரட்டினார். அதனால் தான் அவர்கள் அலறி கூச்சல் போட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி 4 பேரும் திருவிழா, வீட்டு விசேஷங்களில் உணவு பரிமாறும் வேலை பார்த்து வந்ததும், திருச்செந்தூர் ரெயிலில் மதுரைக்கு சென்று அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்து திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் கொடைரோடு ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். கொடைரோடு ரெயில் நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தனர்

கொடைரோட்டில் பிடிபட்ட 4 வாலிபர்களும் 'டிக்கெட்' இல்லாமல் பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரெயிலில் பயணம் செய்துள்ளது போலீசாருக்கு தெரியவந்தது. எனவே ரெயில்வே அதிகாரிகள் மூலம் 4 பேர் மீதும் டிக்கெட் இன்றி ரெயிலில் பயணம் செய்ததற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

'செல்பி' எடுக்கலாமா?

பொம்மை துப்பாக்கியை காட்டி பயணிகளை மிரட்டியது தொடர்பாக கேரள வாலிபர்கள் 4 பேரிடமும் ரெயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வாலிபர்களில் ஒருவர் தனது செல்போனை எடுத்தார். பின்னர் போலீசாரை பார்த்து நாம் அனைவரும் சேர்ந்து ஒரு 'செல்பி' எடுக்கலாமா? என்று கேட்டார். இதைக்கேட்டு கோபத்தின் உச்சத்துக்கு சென்ற போலீசார் 4 பேரையும் எச்சரித்து ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் அமர வைத்தனர்.

'தீவிரவாதிகள் ரெயிலை கடத்தி விட்டனர் என்று நினைத்தோம்'-பயணிகள் கருத்து

ஓடும் ரெயிலில் பயணிகளை நடுங்க வைத்த சம்பவம் குறித்து அதில் பயணம் செய்தவர்களில் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

பாலக்காட்டில் இருந்தே அந்த 4 பேரும் ஒன்றாக அமர்ந்து இருந்தனர். அடிக்கடி தங்கள் உடைமைகளை திறப்பதும், மூடுவதுமாக இருந்தனர். அவ்வப்போது 4 பேரும் கூடிநின்று பேசியபடியே வந்தனர். அவர்களின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருந்தது. ஆனாலும் அவர்கள் எந்த அசம்பாவித செயல்களிலும் ஈடுபடாததால் அமைதியாக இருந்தோம்.

கொடைரோடு ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டதும், அந்த வாலிபர்களில் ஒருவர் துப்பாக்கியை காட்டி எங்களை மிரட்டினார். இதனால் நாங்கள் உயிர் பயத்தில் பெட்டிக்குள்ளேயே அங்கும், இங்கும் ஓடினோம். தீவிரவாதிகள் ரெயிலை கடத்தி விட்டனரோ? என்று கூட நினைத்தோம். இதற்கிடையே ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நின்றது. அப்போது அவர்கள் இறங்கி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் மூலம் அவர்கள் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்று தெரிந்ததும் தான் நிம்மதியடைந்தோம் என்றனர்.

மேலும் செய்திகள்