ராகுல் காந்திக்கு மிரட்டல்: பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பா.ஜ.க. தலைவர் ஒருவர் "ராகுல் காந்தியின் பாட்டிக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேரும்" எனவும், ஷிண்டே சேனாவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் "ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்குப் பரிசு" எனவும், இன்ன பிற வகைகளிலும் மிரட்டல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
எனது சகோதரர் ராகுல் காந்தியை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதும், நாளுக்கு நாள் அவருக்குக் கூடி வரும் பொதுமக்களின் ஆதரவும் பலரையும் மிரளச் செய்துள்ளதன் தொடர்ச்சியாகவே இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.