மதுரை
அந்தரங்க படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
|அந்தரங்க படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரை முனிச்சாலையை சேர்ந்த சித்ரா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறேன். மக்கள் பார்வை என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன். இதற்கிடையே, சுப்புலட்சுமி என்ற ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா என்ற சிக்கந்தர் ஆகியோர் டிக்-டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னர், யூ-டியூபில் தனி நபர்கள் குறித்து ஆபாசமாக பேசி வருகின்றனர். அவர்களின் ஆபாச பேச்சுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த திலகவதி, ரவி ஆகிய யூ-டியூபர்களுக்கு சட்ட உதவிகளை செய்தேன். அப்போது, சூர்யாவும், சிக்கந்தரும் என்னை தொடர்பு கொண்டு பிரச்சினை வேண்டாம் என்று கூறி நட்புடன் பழக தொடங்கினர். இதற்கிடையே நானும், சூர்யாவும் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது, சிக்கந்தர் தனது மனைவி சுமியுடன் சேர்ந்து ஒரு முதியவரை விஷம் வைத்து கொன்று விட்டதாக பேசிய ஆடியோவை என்னிடம் பகிர்ந்தார். சூர்யாவின் சம்மதத்தோடு அதனை எனது சேனலில் வெளியிட்டேன். இதனால் சிக்கந்தர் ஆத்திரமடைந்து சூசை மேரி, அரிக்குமார். கோவை தமிழன் என்கிற ஹரி ஆகியோருடன் சேர்ந்து தினமும் சமூக வலைதளம் மூலமாகவும், போனிலும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுகின்றனர்.
இந்த விவகாரத்தில் எனது அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மிரட்டினர். இதுதொடர்பான வழக்கு மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு பதிவு செய்து 2 மாதம் தான் ஆகிறது. அதற்குள் என்ன அவசரம்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, இவர்கள் பேசி வரும் ஆபாச பேச்சுக்களுக்காக பலர் கொடுத்த புகாரின் பேரில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சைபர்கிரைம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.