விழுப்புரம்
பல்வேறு வகையில் உயிருக்கு அச்சுறுத்தல்
|செல்போனை வழங்காமல் போலீசார் அலைக்கழிப்பு: பல்வேறு வகையில் உயிருக்கு அச்சுறுத்தல் உரிய பாதுகாப்பு கேட்டு மாணவி ஸ்ரீமதியின் பெரியப்பா மனு
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த மாமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 46). இவர், மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வியின் அக்காள் உமா என்பவரின் கணவராவார். இவர் கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 22-ந் தேதி மாமந்தூர் கிராமத்திற்குச்சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார், செல்வத்திடம் இருந்து அவரது செல்போனை பிடுங்கி எடுத்துச்சென்றுள்ளனர். அப்போது செல்போனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும், 15 நாட்கள் கழித்து அவர்களே அழைத்து, செல்போனை தருவார்கள் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செல்வத்திடம் கூறியுள்ளனர். ஆனால் செல்போனை தராததால் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சென்று செல்போனை தரும்படி செல்வம் கேட்டுள்ளார். அப்போது, செல்போனில் இருந்த சிம் கார்டை மட்டும் கழற்றிக்கொடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், செல்போனை கொடுக்காமல் வைத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று செல்வம், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், என் தொழில் சம்பந்தமான தொலைபேசி எண்கள் எனது செல்போனில் இருக்கிறது. அது என் வாழ்வாதாரத்திற்கு மிகவும் தேவைப்படுவதால் அதை மீட்டுத்தரும்படியும் குறிப்பிட்டிருந்தார். மேலும் பல்வேறு வகையில் அச்சுறுத்தல் இருப்பதால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அம்மனுவில் கூறியிருந்தார்.
மேலும் மாணவி ஸ்ரீமதி தரப்பு வக்கீல் லூசி, நிருபர்களிடம் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர், உறவினர்களிடமே சி.பி.சி.ஐ.டி. போலீசார் திரும்ப, திரும்ப விசாரணை நடத்தி வருகின்றனர். புகாருக்குள்ளான பள்ளித்தரப்பில் விசாரணை நடத்தவில்லை. பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து, அவர்களை குற்றவாளிகளாக கருதி, அவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, அவர்களது செல்போன்களை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் மறைந்திருக்கும் உண்மைகள் வெளிவரும். அதுமட்டுமின்றி, பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், கனியாமூர் பள்ளியை அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்றார்.