ஆதீனத்திற்கு மிரட்டல்: பா.ஜ.க. நிர்வாகிக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
|பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமீன் மனுவை 2வது முறையாக சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி சிலர் மிரட்டல் விடுத்து வந்தனர்.
இந்த மிரட்டல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 4 பேரை கைது செய்த போலீசார், வழக்கு தொடர்பாக பா.ஜனதா மாவட்ட தலைவர் அகோரம் என்பவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து ஜாமீன் கேட்டு அகோரம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் ஜாமீன் கேட்டு அகோரம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அகோரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அகோரம் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், 45 நாட்களுக்கும் மேல் சிறையில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வாதிட்டார். தொடர்ந்து காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் இன்னும் தலைமறைவாக இருப்பதால், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே அகோரத்திற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.