விருதுநகர்
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கானோர் சிவராத்திரி தரிசனம்
|மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு
மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிவராத்திரி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி பூஜைகள் சிறப்புக்குரியது.
இந்த நிலையில் நேற்று சனிப்பிரதோஷம், மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிய தொடங்கினர்.
பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே சென்றதால் காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு மலைப்பாதை வழியாக பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் மாங்கனி ஓடை வழியாக கயிறு, கம்பு உதவியுடன் அதை கடந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.
சாமி தரிசனம்
மகா சிவராத்திரி என்பதால் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு இரவில் நான்கு கால பூஜைகள் மற்றும் 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று மாலை 6 மணி வரை முதல் நடைபெற்ற மகா சிவராத்திரி சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜையில் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடியும், சங்கு முழங்கியும் வழிபட்டனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக மதுரை மாவட்டம் சாப்டூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு போலீசார், வனத்துறையினர் என 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.