ஆனி மாத பவுர்ணமி: சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
|பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பவுர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி முதல் நாளை (14-ந்தேதி) வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இன்று பவுர்ணமி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவில் அடிவாரத்தில் குவிந்தனர். மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பத்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.