சென்னை
'சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுபவர்கள் நாட்டை சிதைக்க பார்க்கிறார்கள்' - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
|‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுபவர்கள் நாட்டை சிதைக்க பார்க்கிறார்கள்' என சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள பலிமார் மடத்தில் உடுப்பி ஸ்ரீவித்யாதீச தீர்த்த சுவாமிகளின் 45-வது சாதுர்மாஸ்ய விரதத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது.
'சனாதன உற்சவம்' என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மடத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
நமது நாட்டில் ஆன்மிகவாதிகள் சென்ற இடமெல்லாம் புண்ணிய பூமியாக மாறியுள்ளது.
சனாதன தர்மம் நிலைத்து நிற்க ரிஷிகள், முனிவர்கள் போன்றோரின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்துள்ளது. சனாதனத்தின் அடிப்படை அத்தியாயம் நம் வேதங்களில் உள்ளது, ரிஷிகள், முனிவர்கள் வாழ்வியல் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு அதனை தந்துள்ளனர்.
பாரதம் உருவானதே சனாதன தர்மத்தில்தான். சனாதனத்தில் எல்லாம் உள்ளது.
மரத்தின் அடிவேர் போல் இருப்பது சனாதனம். இலை இல்லாமல் கிளை இல்லாமல் மரம் வாழலாம். ஆனால் வேர் இல்லாமல் மரம் வாழ முடியாது. அந்தளவுக்கு சனாதன தர்மம் வாழ்வியலில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
சனாதன தர்மத்தின் மிகவும் முக்கியமான பகுதியாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இடங்கள் சனாதனம் தர்மத்தின் சான்றுகளாக இருக்கின்றன.
எனவே, சனாதனத்தை ஒருபோதும் ஒழிக்க முடியாது. அது, மண்ணோடும், மக்களோடும் நெருக்கமாக உள்ளது.
யாரெல்லாம் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுகிறார்களோ அவர்கள் இந்த நாட்டை சிதைக்க பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே, நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.