படுகொலை சம்பவத்தில் சரண் அடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை - திருமாவளவன்
|கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பார்த்த பின், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், "ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உள்ளோம். அரசு அதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. அதே போல் அவரது கட்சி அலுவலக வளாகத்திற்குள்ளே அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதே கோரிக்கையை விடுதலை சிறுத்தை கட்சியும் வலியுறுத்துகிறது. தமிழக அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்.
இந்த கொலையின் பிண்ணனியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை தூண்டிவிட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். சரணடைந்தவர்களை கைது செய்துவிட்டோம் என்ற அளவிலே புலன் விசாரணையை நிறுத்திக்கொள்ள கூடாது. பிண்ணனியில் இருக்கும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இங்கு திரண்டிருக்கும் அமைப்புகள் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
மக்கள் பிரச்சினையில் ஆம்ஸ்ட்ராங் தலையிட்டதால் அவருக்கு அச்சுருத்தல் எழுந்ததுண்டு, முன்விரோதம் எழுந்ததுண்டு. இது போலீசுக்கு நன்றாக தெரியும். அவர்குரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி இருக்க வேண்டும்.
இன்று ஒரு அரசியல் தலைவர் அவரது வீட்டின் அருகே கொல்லப்பட்டிருப்பது தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் விடுக்கப்பட்ட சவால். அவருக்குரிய பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறை வழங்கி இருக்க வேண்டும், வழங்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள், இளைஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது. கூலிப்படை கும்பலை, சாதியவாத கும்பலை, கொலைகார கும்பலை அடையாளம் கண்டு கட்டுப்படுத்த தவறினால் அரசுக்கு மேலும் களங்கம் ஏற்படும்" என்று அவர் கூறினார்.