'தி.மு.க.வை அழித்துவிடுவோம் என்று சொன்னவர்கள் பலர் எங்கே போனார்கள் என தெரியவில்லை' - கனிமொழி எம்.பி.
|பிரதமரின் பேச்சைக் கேட்டு பயப்பட வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு கிடையாது என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தி.மு.க.வை அழிப்போம் என்று சொன்னவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-
"தி.மு.க.வை அழித்துவிடுவோம், இல்லாமல் செய்துவிடுவோம் என்று சொன்னவர்கள் பல பேர் இன்று எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை. நாங்கள் நிறைய பேரை பார்த்துவிட்டோம். பிரதமரின் பேச்சைக் கேட்டு பயப்பட வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு கிடையாது.
தேர்தல் நேரத்தில் அடிக்கடி வந்தால் யாராவது வாக்களிப்பார்களா என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். நம்மை இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களே தவிர, வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் எந்த தலைவரும் தமிழில் பேசுவது இல்லை.
வட இந்திய தலைவர்கள் ஏதாவது ஒரு தென்னிந்திய மொழியை கற்றுக்கொண்டால்தான் உண்மையான தேசிய ஒருமைப்பாடு ஏற்படும். தமிழ் கற்றுக்கொண்டு அவர்கள் நல்ல தமிழில் பேசினால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்."
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.