நாடாளுமன்ற நிகழ்வுகளை, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவுரை
|நாடாளுமன்றத்தில் விவாதங்கள் எதுவும் இல்லாமல் கூச்சல்-குழப்பத்தில் உறுப்பினர்கள் ஈடுபடுவதை மக்கள் மத்தியில் மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவுறுத்தியுள்ளார்.
ஐ.ஐ.டி.யில் புதிய மையம்
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையம் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்துக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் 1981-ம் ஆண்டு படித்த பழைய மாணவர்களால் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுதா-சங்கர் புதிய கண்டுபிடிப்பு மையம் என்ற பெயரில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் தொடக்க விழா சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி வரவேற்றார்.
துணை ஜனாதிபதி
விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்து வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு வரை 30 ஆண்டுகள் கூட்டணி கட்சிகள் பல சேர்ந்து மத்தியில் ஆட்சி செய்து வந்தன. 2014-ம் ஆண்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. தனி ஒரு கட்சி ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 2019-ம் ஆண்டு வளர்ச்சிக்கான அடித்தளம் கிடைத்தது. இதன் விளைவாக நாட்டின் வலுவான நிதிநிலை அறிக்கையை நம்மால் தயாரிக்க முடிந்துள்ளது. இந்தியா, புத்தாக்க நிறுவனங்களை தொடங்குவதில் சிறந்த நாடாக 3-வது இடத்தை பிடித்திருக்கிறது. விரைவில் முதல் இடத்தை பிடிக்கும்.
உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை பதவிகளை இந்தியர்கள் வகித்து வருகின்றனர். 2047-ம் ஆண்டு இங்குள்ள மாணவர் பலர் முக்கிய இடங்களில் இருப்பீர்கள். மனித வளத்தில் இந்தியர்களின் சிறந்த சிந்தனை மற்றும் ஆற்றல் திறன் உலகை வழி நடத்தும்.
கூச்சல்-குழப்பம்
மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணத்தில் நாடாளுமன்றம் இயங்குகிறது. நமது முன்னோர்கள் நாடாளுமன்ற கூட்டத்தை எந்த பிரச்சினைகளும் இல்லாமல் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது விவாதங்கள் இல்லாமல் கூச்சல்-குழப்பம் நிலவுவது ஆச்சரியம் அளிக்கிறது.
நாடாளுமன்றத்தில் இதுபோன்று நடப்பதை, மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் எடுத்துச்சென்று மக்களிடம் கொண்டு சேருங்கள். உங்களை போன்ற இளம் தலைமுறையினரின் ஆதரவு எனக்கிருந்தால், இது பெரும் இயக்கமாக மாறும். அப்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியவரும்.
அரசியல் லாபத்துக்கான செயல்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவருடைய நடவடிக்கைகளாலோ அல்லது வார்த்தையிலோ தவறான விஷயங்களை குறிப்பிடும் போது அதை வழக்காகக்கூட நீதிமன்றத்தில் கொண்டு செல்ல இயலாது. பொறுப்பற்ற செயல்களுக்கான வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்ளாமல் 140 கோடி மக்களின் இறையாண்மை என கருத வேண்டும்.
ஒருவர் தங்களுடைய கருத்தை வெளியிடுவதற்கான அனைத்து சுதந்திரமும் உள்ளது. நமது நாட்டின் உயர்ந்த அமைப்பான, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பின்பு 20 ஆண்டுகள் கழித்து அந்த விவகாரத்தில் (பி.பி.சி. விவகாரம்) கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விருப்பப்பட்டது போல் மாற்றி திரித்து வெளியிடுவது அரசியல் லாபத்திற்கான செயல்.
இவ்வாறு அவர் பேசினார்.
இலக்கை நோக்கி முன்னேறுங்கள்
தொடர்ந்து மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை நேரில் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், 'தோல்விகளை கண்டு அஞ்ச வேண்டாம். மன அழுத்தத்தை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். கண்டுபிடிப்புகளின் முன்னோடி இந்தியா' என்றார்.
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக தமிழகத்துக்கு வந்த ஜெகதீப் தன்கர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதியின் மனைவி சுதேஷ் தன்கர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, புதிய கட்டிடம் உருவாக ஆதரவாக இருந்த முன்னாள் மாணவரான தொழில் அதிபர் சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களை உற்சாகமூட்டிய துணை ஜனாதிபதி
விழாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் சாதனைகளை இயக்குனர் காமகோடி குறிப்பிட்டு பேசியபோது, ஜெகதீப் தன்கர் கைகளை தட்டி தனது பாராட்டை வெளிப்படுத்தினார். விழா முடிவில் நன்றி தெரிவித்து பேசிய ஐ.ஐ.டி. மாணவரை தனது அருகே அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு தோளை தட்டிக்கொடுத்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய மின்சாரத்தில் இயங்கும் பந்தயக்காரில் அமர்ந்த ஜெகதீப் தன்கர், தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த அமைச்சர் பொன்முடி மற்றும் காமகோடி ஆகியோரை அதே காரின் இருக்கையில் அமரச் செய்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதேபோன்று ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளை கேட்டறிந்த பின்னர், அந்த மாணவர்களின் தோள்களை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கலந்துரையாடல் முடிவில் சிறப்பாக கேள்வி கேட்ட மாணவர்களுக்கு தனக்காக கண்ணாடி டம்ளரில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடிப்பதற்கு கொடுத்து உற்சாகமூட்டினார்.