ராணிப்பேட்டை
குடிசை, மண் வீட்டில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும்
|3 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால் குடிசை மற்றும் மண் வீட்டில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் முகாம்களுக்கு செல்லுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தி உள்ளார்.
3 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால் குடிசை மற்றும் மண் வீட்டில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் முகாம்களுக்கு செல்லுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காற்றுடன் கூடிய மழை
புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 47 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு தேவையான தற்காலிகமாக தங்க வைப்பதற்கான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை 3 நாட்களுக்கு மழையுடன் கூடிய காற்று பலமாக வீசக்கூடும் என்பதால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தாழ்வான நிலையில் செல்லும் மின் கம்பிகள், சாய்ந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின்கம்பங்களை கண்டறிந்து அவைகளை அகற்றவும், சீர்செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிர்ச்சேதத்தை தவிர்க்க வேண்டும்
மழையுடன் கூடிய காற்று பலமாக வீசக்கூடும் என்பதால், பள்ளிகுழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மழை மற்றும் மின்னலின் போது நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்களின் கீழ் நிற்பதையும், ஆடு, மாடுகளை மின்கம்பங்களில் கட்டுவதையும் தவிர்க்க வேண்டும். பாழடைந்த கிணறுகள், கைவிடப்பட்ட கற்குவாரிகள், ஆற்றுப்பகுதிகளில் தங்கள் குழந்தைகள் குளிக்க செல்லாமல் இருப்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதைக் கண்டால் உடனுக்குடன் மின்துறையினருக்கு 1912 என்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்து, அப்பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுத்து, உயிர்ச்சேதம் ஏற்படுவதை தடுத்திட வேண்டும்.
கட்டுப்பாட்டு அறை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள் மற்றும் தாசில்தார்களின் செல்போன் எண்கள் விவரம் வருமாறு:-
அரக்கோணம் - 04177-236360, 9445000507, ஆற்காடு - 04172-235568, 9445000505, வாலாஜா - 04172 - 299808, 9445000506, சோளிங்கர் - 04172-290800, 9791279247, நெமிலி - 04177 - 247260, 9500668681, கலவை - 04173-290031, 8825709788.
இது மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 04172 - 271766, 271966 ஆகிய எண்களுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பாதிப்பு சம்பவங்களை புகைப்படம் எடுத்து அல்லது வீடியோ வடிவில் 9489668833 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களுக்கு...
வருகிற 11-ந் தேதி வரை 3 நாட்களுக்கு மழையுடன் கூடிய காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குடிசை மற்றும் மண் வீட்டில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் மற்றும் நிவாரண முகாம்களுக்கும் செல்ல வேண்டும். அனைத்து குடியிருப்புகளிலும் பொதுமக்கள் மின்சாரத்தினை கையாளும் போது கவனமுடன் கையாள வேண்டும். மொத்தத்தில் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.