பணி நியமனம் செய்யக்கோரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாவிரதம்
|ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தங்களை பணி நியமனம் செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
ஆசிரியர் தகுதித்தேர்வு எனப்படும் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலைக்காக 10 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரிகள், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தங்களை பணி நியமனம் செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மு.புகழேந்தி, சி.கபிலன், மின்னல் ரவி, அல்டாஸ், தகடூர் ரா.தவமணி, மு.வடிவேலன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாணை 149-ஐ ரத்து செய்து, தி.மு.க. தேர்தல் அறிக்கையின் 177-வது வாக்குறுதிப்படி, தங்களை காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். மேலும் இது தொடர்பான பதாகைகளையும் தங்கள் கைகளில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் வாக்குறுதி எண் 177...
இதுகுறித்து ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி மு.புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
2021 சட்டமன்ற தேர்தலின்போது தற்போது ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண் 177-ல் 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆட்சி பொறுப்பேற்று ஓர் ஆண்டு கடந்த நிலையிலும் தற்போது வரை 'டெட்' தேர்ச்சி பெற்றோரை பணியில் அமர்த்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசாணை எண் 149...
அதேநேரத்தில், தற்போது பள்ளிகளில் 30 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 13 ஆயிரத்து 331 காலியிடங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து உள்ளனர். எனவே, நியமன தேர்வு குறித்த அரசாணை எண் 149-ஐ ரத்து செய்து 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கும் எங்களை தகுதி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக் கோரி, மாநிலம் முழுவதும் உள்ள 'டெட்' தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை ஒருங்கிணைத்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
நாங்கள் ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பயன் இல்லை. இந்த முறை நாங்கள் ஒரு முடிவு தெரியாத வரை போராட்டத்தை கைவிடப் போவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.