திருவள்ளூர்
கலைத்துறையில் சாதனை படைத்தவர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
|கலைத்துறையில் சாதனை படைத்தவர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும் அதற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச்சுடர்மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது என வயதுக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடக கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாக கொண்டுள்ள கலைஞர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் சுயவிவர குறிப்பு, நிழற்படம் இணைத்து, வயதுச்சான்று, முகவரிச்சான்று (ஆதார் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவ சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சீபுரம் 631 502 என்ற முகவரிக்கு 20.6.2023-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரம் வேண்டுவோர் இந்த அலுவலக தொலைபேசி எண் 044-27269148-ல் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.