உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
|காலை உணவுத்திட்டத்தால் என் மனம் நிறைந்து, மகிழ்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருக்குவளை,
காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பயின்ற தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பர்; உயிர் கொடுத்த அரசாக திமுக அரசு உள்ளது. காலை உணவுத்திட்டத்தால் என் மனம் நிறைந்து, மகிழ்கிறது. இந்த திட்டத்தால் 31 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் உள்ள 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். கலைஞர் படித்த பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும், காலை உணவுத் திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது. படிப்புக்காகவும், வேலைக்காகவும், பேருந்தில் செல்லும் சகோதரிகள் கட்டணமில்லாமல் விடியல் பயணத்தை மேற்கொள்ளும்போதும், உயர்கல்வி பெறும் அரசு பள்ளி மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் 1000 பெறும்போதும், அவர்களைவிட எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி. எந்த காரணமும் கல்வி கற்க தடையாக இருக்கக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது.
கலைஞரின் மகனாக பெருமைப்படுகிறேன். அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் தடத்தை பின்பற்றி நடக்கிறேன். பலரது மகிழ்ச்சிக்கு காரணமாக நான் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்கள், இளைஞர்களுக்கு பாடமாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உள்ளார்.
காலை உணவுத் திட்டத்திற்காக அரசு செய்வது நிதி ஒதுக்கீடு அல்ல; நிதி முதலீடு. காலை உணவு கிடைக்க வேண்டும், ஊட்டச்சத்து குறைபாடு இருக்க கூடாது, ரத்த சோகையை தவிர்க்க வேண்டும். ஊட்டச்சத்து குறைவு இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். உதவ யாரும் இல்லை என கலங்கும் மக்களுக்கு திமுக அரசு உறுதுணையாக இருக்கும். இது துரோணாச்சாரியார் காலம் அல்ல; ஏகலைவன்கள் காலம்.
காலை, மதிய உணவை நாங்கள் வழங்குகிறோம், குழந்தைகளே படியுங்கள்; படிப்பு மட்டும்தான் யாராலும் பிரிக்க முடியாத சொத்து; நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள், படிப்பு உங்களை உயர்த்தும். காலை உணவே சாப்பிட முடியாத பிள்ளைகளால் எப்படி படிக்கமுடியும்; பசிப்பிணி நீங்கிவிட்டால் மாணவர்கள் மனநிறைவோடு படிப்பார்கள்.
அரசைப் போன்று தாயுள்ளத்தோடு காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; தங்கள் பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதைப் போல உணவு வழங்கவேண்டும் என்று அரசு அதிகாரிகள், சத்துணவுக்கூட ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.