ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|ஆன்மிகத்திற்கு தாங்கள் எதிரிகள் அல்ல என்றும், சாதியால், மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்குதான் தாங்கள் எதிரிகள் என்றும், அறிவார்ந்த யாரும் அரசுக்கு ஆலோசனை சொல்லலாம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நலத்திட்ட உதவி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் அரசு சார்பில் நடந்த விழாவில் நேற்று பங்கேற்றார்.
இதில் ரூ.340 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 246 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.70 கோடியே 27 லட்சம் செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் 1 லட்சத்து 71 ஆயிரத்து 169 பயனாளிகளுக்கு ரூ.693 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பக்தர்களுக்கு வசதிகள்
அருணாச்சலேசுவரர் கோவிலில் வழிபாடு செய்யவும், கிரிவலம் செல்லவும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழாவின் போதும் கிரிவலம் செல்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அந்த கிரிவலத்திற்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதி களையும் இந்த அரசு நிச்சயமாக நிறைவேற்றித்தரும்.
ரூ.140 கோடியில் மேம்படுத்தப்படும்
திருவண்ணாமலை மாவட்டத்திலும், வேலூர் மாவட்டத்திலும் இருக்கக்கூடிய ஜவ்வாது மலைப்பகுதியில் 20 மலைக்கிராமங்களை இணைக்கக்கூடிய பரமனந்தல் ஜமுனாமுத்தூர் அமிர்த சாலையை மேம்படுத்த வேண்டும் என்றும், இந்த வழியாக போதிய பஸ் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் மழைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை ஏற்று இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வனத்துறையினுடைய அனுமதியை பெற்று 140 கோடி ரூபாய் செலவில் அது அகலப்படுத்தப்படும், மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆன்மிக வியாதிகள்
இவையெல்லாம் மதத்தை வைத்து அரசியல் செய்கின்ற கண்களுக்கு தெரியாது. மதத்தை வைத்து அரசியல் செய்கின்றவர்களுக்கு, அவர்கள் கண்களுக்கெல்லாம் இது தெரியாது. ஏனென்றால் அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகள் அல்ல, அவர்கள் உண்மையான ஆன்மிக வியாதிகள், ஆன்மிகப்போலிகள், ஆன்மிகத்தை தங்களது அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய எண்ணத்தை கொண்டவர்கள்.
நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை, கட்சியானாலும், ஆட்சியானாலும் மக்கள் முன் நின்று நாங்கள் ஆட்சி நடத்துறோம், கட்சி நடத்துகிறோம். அதுதான் அனைத்து துறை வளர்ச்சி. அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து தொழில் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை இன்றைக்கு நாம் நடத்தி வருகிறோம்.
நாங்கள் எதிரிகள் இல்லை
கோவிலுக்கு திருப்பணி செய்வது திராவிட மாடலா? என்று சிலர் கேட்கிறார்கள், கேள்வி எழுப்பி வருகிறார்கள். அனைத்து துறையையும் சமமாக வளர்ப்பதுதான் 'திராவிட மாடல்' என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். கோவில்களை முறைப்படுத்துவதற்காக, ஒரு சட்டம் வேண்டுமென்று ஆன்மிக எண்ணம் கொண்டவர்கள் கோரிக்கை வைத்தபோது அதனை ஏற்று, சட்டம் போட்ட ஆட்சிதான் நீதிக்கட்சியின் ஆட்சி.
எது திராவிட மாடல்? என்று பிற்போக்குத்தனங்களுக்கும், பொய்களுக்கும் பெருமை எனும் முலாம் பூசி பேசுபவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மிகத்தின் பெயரால் இன்றைக்கு அவர்கள் அரசியல் நடத்த முயற்சிக்கிறார்கள். ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல, ஆன்மிகத்தின் பெயரால் மனிதர்களை சாதியால், மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள்.
மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களை பிளவுபடுத்துவதற்கு ஆன்மிகத்தை பயன்படுத்துபவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக அவர்கள் நிச்சயமாக இருக்க முடியாது.
மக்களுக்கு நன்மை செய்யும் நேரம்
அறம் என்றால் என்னவென்றே தெரியாத, அறிவுக்கு ஒவ்வாத மூடக்கருத்துகளை முதுகில் தூக்கி சுமந்துகொண்டிருக்கும் சிலருக்கு போலியான பிம்பங்களை கட்டமைக்க வேண்டுமானால் உளறல்களும், பொய்களும்தான் தேவை. மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு என்று தமிழ்நாடும், தமிழினமும் முன்னேற சிந்தித்து செயல்படுவதுதான் தி.மு.க. அதுதான் திராவிட அரசியல் மரபு.
அறிவார்ந்த யாரும், எவரும் இந்த அரசுக்கு ஆலோசனை சொல்லலாம். அதனை நாங்கள் செயல்படுத்துவோம். அறிவார்ந்தவர்கள் பேசுவதை மட்டுமே நாம் காதில் கேட்க வேண்டும். நமக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் காத்துக்கிடக்கிறது. இது தேர்தல் காலம் அல்ல, மக்களுக்கு நன்மை செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலம் இது. பொய்யும், புரட்டும் மலிவான விளம்பரம் தேடும் வீணர்களை பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.
கோப்புகள் தேங்க கூடாது
நான் மட்டுமல்ல, நீங்கள் ஒவ்வொருவரும், 'கவலைப்பட மாட்டோம்' என்று சொல்லி நகர வேண்டும். அப்படி பொய்களை அனாதைகளாக விட்டு, உண்மை எனும் வெளிச்சத்தை துணையாக கொண்டு நடந்தாலே, நாம் முன்னேறலாம், நம்முடைய இலக்குகளை அடையலாம். காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்பதை யாரும் மறக்க வேண்டாம். எந்த கோப்பும், எந்த பணியும் தேங்க விடக்கூடாது என்ற எண்ணத்தோடு பணியாற்றுங்கள். மக்கள்தான் நம் எஜமானர்கள்.
என்னுடைய மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நான் மக்கள் பணியாற்றி வருகிறேன். என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது. தமிழினம் ஒளிபெற நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற என்றும் உங்களில் ஒருவனாக உழைப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.