< Back
மாநில செய்திகள்
கைய பிடிச்சு இழுத்தா வராதவ கண் அடிச்சா மட்டும் வரவா போறா- துரைமுருகன் அடித்த கூட்டணி கமெண்ட்
மாநில செய்திகள்

கைய பிடிச்சு இழுத்தா வராதவ கண் அடிச்சா மட்டும் வரவா போறா- துரைமுருகன் அடித்த கூட்டணி கமெண்ட்

தினத்தந்தி
|
6 March 2024 1:21 PM IST

தி.மு.க. கூட்டணியில் இருப்பவர்களை கையை பிடித்து இழுத்தாலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரமாட்டார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை,

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிட அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். கதிர் ஆனந்த் விருப்பமனு அளித்த நிலையில்,சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்: பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தபோது தி.மு.க. மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். வெள்ளத்தின்போது தி.மு.க. மக்களுக்கு உதவி செய்வதற்கு பதில் அதிக அளவு துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்ற கருத்தை முன்வைத்துள்ளாரே?

துரைமுருகன் பதில்:

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்கள் பொன்னும் பொருளும் கொடுத்தவர்கள்தான் அது குறித்து பேச உரிமை உள்ளவர்களே தவிர வானத்தில் இருந்து பறந்து வந்து பார்க்காதவர்கள் அதை பற்றிபேச உரிமை இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

செய்தியாளர்: தி.மு.க. மீதும் இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் மீதும் குடும்ப அரசியல் என்று பிரதமர் மோடி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்தியாதான் தனது குடும்பம் இந்தியாவிற்காக நான் உழைக்கிறேன். குடும்பத்திற்காக இந்தியா கூட்டணியினர் உழைக்கின்றனர் என்று மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

துரைமுருகன் பதில்: இவர் மற்றவரை எல்லாம் குடும்ப அரசியல் என்று சொல்லிவிட்டு இவர் தேசிய அரசியல் பண்ணுகிறார். தேசமே என் குடும்பம் என்று சொல்லிவிட்டார்.

செய்தியாளர்:

குடும்ப அரசியலில் இருக்கிறவர்கள் கொள்ளையடித்து வைத்த சொத்துக்கள் எல்லாம் வரக்கூடிய 5 ஆண்டு ஆட்சி அமைக்கும்போது மீண்டும் மக்களுக்கு கொடுப்பதே எனது (மோடியின்) உத்தரவாதம் என்று சொல்கிறார்.

துரைமுருகன் பதில்: கருப்பு பணத்தை மீட்டு நாட்டில் உள்ள அனைவருக்கும் 15 லட்சம் கொடுக்கிறேன் என்று கூறியவர் அதை கொடுத்து விட்டு இந்த வேலைக்கு வரட்டும்.

செய்தியாளர்:

பிரதமர் மோடியின் தமிழகம் வருகை மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார்.

துரைமுருகன் பதில்: எங்க தலைவர் வந்தாரு மாற்றம் ஏற்படும் என்று அவர்கள் அப்படிதான் சொல்வார்கள்.

செய்தியாளர்:

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி முடிவு பண்ணாமால் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நீடிக்க காரணம் என்ன?

துரைமுருகன் பதில்:

விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடையும் எங்களுக்கு ஒன்றும் பாதகம் இல்லை.

செய்தியாளர்:

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் காங்கிரஸ் கிட்ட அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அதை தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார்களே?

துரைமுருகன் பதில்: ஒரு படத்தில் நான் கேள்வி பட்டேன். கைய பிடிச்சு இழுத்தா வராதவ கண் அடிச்சா மட்டும் வரவா போறா என்ற வசனம் வரும். அது மாறி யாரும் கண் அடிச்சாலும் வரமாட்டாங்க...கை பிடிச்சு இழுத்தாலும் வரமாட்டாங்க

செய்தியாளர்:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடம் தி.மு.க. கெஞ்சிக்கிட்டு இருக்கிறது என்று 3 நாட்களாக கூறிவருகிறார்.

துரைமுருகன் பதில்: ஜெயக்குமார் எப்பொழுதுமே தமாசாக பேசுவார்

மேலும் செய்திகள்