விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பழனி தகவல்
|விழுப்புரம் மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்தவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்குவதாகும்.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், இணையவழியில் விண்ணப்பிக்கவும், https://www.tnesevai.tn.gov.in/, https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும். 30.6.2023 இரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும்.
கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரமாகும். இந்த விண்ணப்ப கட்டணத்தை இணையவழி முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை "முகவரி" என்ற ஆண்ட்ராய்டு செல்போன் செயலியை பயன்படுத்தி காணலாம். அல்லது https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.
மேற்கண்ட தகவல் விழுப்புரம் மாவட்ட கலெக்டா் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.