தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர வேண்டும் - நீதிபதிகள் கருத்து
|தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு பின்னர் முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலரான வக்கீல் ஹென்றி திபேன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி டிஎஸ்பி தரப்பில் ஆஜரான வக்கீல், "மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது" என்று வாதிட்டார்.
அதையேற்க மறுத்த மனுதாரரான ஹென்றி திபேன், "மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி, மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க எந்த தடையும் இல்லை" என்று வாதிட்டார்.
சிபிஐ தரப்பில், "இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வரும் சூழலில், இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை" என்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவி பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவத்துக்காக எந்த அதிகாரியும் இதுவரை வருந்தியதாக தெரியவில்லை. துப்பாக்கிச்சூட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்தும்படி உத்தரவிட்டது யார்? இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளப்போவது யார்? என கேள்வி எழுப்பினர்.
பின்னர் எதிர்மனுதாரர்களின் ஆட்சேபத்துக்கு பதிலளிக்க ஹென்றி திபேனுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.