தூத்துக்குடி: பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தம்..!
|பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலயத்தின் 67-வது உற்சவ திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை), நாளையும் நடக்கிறது. இந்த திருவிழாவுக்கு தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமத்துரை நினைவு ஜோதி கொண்டு வரப்படுகிறது. இந்த கோவில் திருவிழாவில் இரு நாட்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக விழா நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், நேற்று மாலை 6 மணி முதல் 14-ந் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பாஞ்சாலகிங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் இருந்து புறப்பட்ட ஜோதியை போலீசார் தடுத்து நிறுத்தினர். 144 தடை உத்தரவு காரணமாக ஜோதியை போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.