தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரெயில் சேவை இன்று தொடங்குகிறது
|தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் புதிய ரெயில் சேவையை மத்திய மந்திரி எல்.முருகன் இன்று தொடங்கி வைக்கிறார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தொழில்நகரமாக உருவெடுத்து உள்ளது. ஆனாலும் இங்கு ரெயில்சேவை குறைவாகவே உள்ளது. ஏற்கனவே தூத்துக்குடியில் இருந்து கோவைக்கும், பகல் நேரத்தில் சென்னைக்கும் இயக்கப்பட்டு வந்த இணைப்பு ரெயில்கள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் பல்வேறு நகரங்களுக்கு ரெயில் சேவை வழங்க வேண்டும் என்று ரெயில் பயணிகள், வர்த்தக சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாரம் 2 நாட்கள் புதிய ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து சுமார் 3 ஆண்டுகள் ஆகியும் இந்த ரெயில் இயக்கப்படாமல் இருந்து வந்ததால் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த ரெயிலை விரைவாக இயக்க வேண்டும் என மாவட்ட பயணிகள் நலச்சங்கம், வர்த்தக தொழில் சங்கங்கள், எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு புதிய ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரெயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
இந்த ரெயில் வாரம்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும். அதே போன்று மறுமார்க்கத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.
கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளதால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.