மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் மறைக்கப்படுகின்றன - பிரதமர் மோடி தாக்கு
|தமிழகம் வளர்ச்சியில் தமிழர் நலனில் என்றும் அக்கறையோடு இருப்பேன் என வாக்குறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். வணக்கம் என்று கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி கூறியதாவது:-
வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை தமிழ்நாட்டின் தூத்துக்குடி எழுதி வருகிறது. திட்டங்களின் தொடக்கம் என்பது அனைவரின் முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கையின் எடுத்துக்காட்டு. இந்த திட்டங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும்.
தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் இந்தியா முழுவதும் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியாவில் தமிழகம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
காங்கிரஸ் ஆட்சி மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறேன்; அவை கசப்பான உண்மைகள். காங்கிரஸ் ஆட்சியின்போது கோரிக்கையாக இருந்தவை அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மக்களின் சேவகனாக நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்.
ஹைட்ரஜன் படகு காசியின் கங்கை ஆற்றில் தன் பயணத்தை தொடங்கவிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் நல்ல உறவு மேலும் உறுதியாக இருக்கிறது. நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் சாலை வழி இணைப்புகள் மேலும் சிறப்பாக மாற உள்ளன. இதனால் பயண நேரம் குறையும்.
தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை. தடைகளை எல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம்.
தமிழகம் வரும்போதெல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தை பொழிகிறார்கள். தமிழர்கள் என் மீது காட்டிய அன்பை பலமடங்காக திருப்பித் தருவேன். தமிழகம் வளர்ச்சியில் தமிழர் நலனில் என்றும் அக்கறையோடு இருப்பேன் என வாக்குறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.