தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5-ம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி
|தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ந்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5-வது ஆண்டு நினைவு தினமான இன்று போராட்டம் நடைபெற்ற பகுதியான குமாரரெட்டியாபுரத்தில் உயிரிழந்த 13 பேரின் உருவப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பாத்திமா அன்னை ஆலயம் அருகே பொதுமக்கள் திரண்டு உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர். இதேபோல் தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மடத்தூர், பாத்திமா நகர், தொம்மையா கோவில் தெரு, பூபாலராயபுரம், லயன்ஸ் டவுன், முத்தையாபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நினைவு நாளையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்தியராஜ், ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் என தூத்துக்குடி மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த 2,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.