சென்னை
எண்ணூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவொற்றியூர் எம்.எல்.ஏ நிவாரண உதவி
|எண்ணூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ நிவாரண உதவிகளை வழங்கினார்.
எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). ஆட்டோ டிரைவர். இவரது குடிசை வீட்டில் நேற்று முன்தினம் இரவு மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியதும் வீட்டை விட்டு அனைவரும் வெளியே ஓடி உயிர் தப்பினர். கொழுந்து விட்டு எரிந்த தீ அருகில் உள்ள வீடுகளிலும் பரவியதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து எண்ணூர், ராயபுரம் மற்றும் திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் தீக்கிரையாகின. வீட்டில் இருந்த டி.வி, பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்து எரிந்து நாசமாயின.
இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே.பி.சங்கர், ஆர்.டி.ஓ. ரங்கராஜ், தாசில்தார் அருள், கவுன்சிலர் தமிழரசன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ.சார்பில் 4 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், 24 கிலோ அரிசி பாய், போர்வை வழங்கினர். வருவாய் துறை சார்பில் தலா ரூ.5 ஆயிரம், 5 கிலோ அரிசி, வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. அ.தி.மு.க.சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.கே.குப்பன் ஆறுதல் கூறி தலா ரூ.2 ஆயிரம், அரிசி, வேட்டி சேலைகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்