< Back
மாநில செய்திகள்
சாக்கு வேடமணிந்த பக்தர்கள் முளைப்பாரியுடன் ஊர்வலம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

சாக்கு வேடமணிந்த பக்தர்கள் முளைப்பாரியுடன் ஊர்வலம்

தினத்தந்தி
|
16 Sept 2022 12:15 AM IST

கமுதி அருகே அழகு வள்ளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் சாக்கு வேடமணிந்த பக்தர்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக சென்றனர்.

கமுதி,

கமுதி அருகே அழகு வள்ளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் சாக்கு வேடமணிந்த பக்தர்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக சென்றனர்.

பொங்கல்விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி மாத பொங்கல் விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த கிராமத்தின் காவல் தெய்வமான அழகு வள்ளி அம்மனுக்கு வருடாவருடம் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம், களிமண் சேறு பூசி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேர்த்திக்கடன்

பின்னர் மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அழகுவள்ளியம்மன் கேட்டதை தரும் சக்தி கொண்டதாக இருப்பதால் இந்த கிராமத்துகாரர்கள் வெளியூரில் வசித்தால் கூட வருடத்திற்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு வந்து பொங்கல் மற்றும் முளைப்பாரி, சாக்கு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சாக்குகளை பேண்ட் மற்றும் சட்டை போல் தைத்து அதை அணிந்து பின்பு வைக்கோல்களை திணித்து கனமான மனிதர் போல மாற்றி முகத்தையும் சாக்கு வைத்து, மூடி வைத்த வைக்கோல் மனிதர்கள் 6 பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஏற்பாடு

முளைப்பாரி கிளம்பியபோது பெண்களின் கும்மி மற்றும் ஆண்களின் கும்மி மேளதாளங்களுடன் சாக்கு வேடம் அணிந்தவர்களும் கும்மி அடித்து முளைப்பாரிக்கு முன்பே நடனம் ஆடி ஊர்வலம் நடந்தது.

500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து அழகு வள்ளி அம்மன் கோவிலுக்கு சென்று கிராமத்தில் உள்ள ஊருணியில் பாரிகளை கரைத்தனர்.விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்