< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் சாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் சாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
2 Aug 2022 8:51 PM IST

ஆடி திருக்கல்யாண திருவிழாவில் ராமேசுவரம் கோவிலில் சாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

ராமேசுவரம்,

ஆடி திருக்கல்யாண திருவிழாவில் ராமேசுவரம் கோவிலில் சாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

வீதி உலா

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பர்வதவர்த்தினி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் ஆடித் திருக் கல்யாண திருவிழாவில் 11-வது நாளான நேற்று காலை கோவிலில் இருந்து அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் ராமதீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து பகல் 12 மணிக்கு மேல் சாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். பின்னர் பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் சாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாமி- அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த மாலை மூன்று முறை மாற்றி அணிவித்து மாலை மாற்றுதல் நடைபெற்றது. பின்னர் தபசு மண்டகப்படியில் சாமி-அம்பாளுக்கு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜை நடைபெற்றது. சாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி மற்றும் பூஜைகளை காண ராமேசுவரம் நகரின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராம தீர்த்த பகுதியில் குவிந்து இருந்தனர்.

மாலை மாற்றுதல் நிகழ்ச்சி முடிந்த பின்னர் சாமி-அம்பாள் மீண்டும் கோவிலுக்கு சென்றடைந்தனர்.இரவு 7 மணிக்கு அனுமார் சன்னதியில் சாமி அம்பாள் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாணம்

திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (புதன் கிழமை) இரவு கோவிலில் ராமநாதசாமிக்கும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 8-ந் தேதி சாமி-அம்பாள் கெந்தமாதனபர்வத மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்