மதுரை
சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா கோலாகலம்
|சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. மலைப்பாதை முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. கோவிலில் பலமணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. மலைப்பாதை முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. கோவிலில் பலமணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
18 வகை அபிஷேகம்
மேற்கு தொ டர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை விழா சிறப்பாக நடைபெறும். கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி இந்த விழா நடந்தது. ஆனால் இந்த ஆண்டு வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் ஆடி அமாவாசை, பிரதோஷத்தையொட்டி கோவிலுக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய 6 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டது.
ஆடி அமாவாசையான நேற்று சதுரகிரியில் தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். மலைப்பாதை முழுவதும், கோவில் பகுதியும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.
சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிக்கு அதிகாலையில் 18 வகையான பூஜைகள் நடந்தன. அதன்பின், அமாவாசை சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை பெய்திருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நேற்று அதிகாலையில் இருந்தே வாகனங்களில் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் அடிவாரத்தில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
பலமணி நேரம் காத்திருப்பு
அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு சென்ற பக்தகர்களும், மலையில் உள்ள கோவிலில் தரிசனம் முடித்து கீழே இறங்கிய பக்தர்களும் வழுக்கு பாறை, சங்கிலி பாறை, கோணத்தலவாசல், கோரக்கர் குகை ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் அந்த இடங்கள் அடிக்கடி ஸ்தம்பித்தன. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் ஒரே இடத்தில் காத்திருந்தனர்.
பின்னர் வனத்துறை, தீயணைப்புப்படையினர், போலீசார் அங்கு வந்து, மேலே இருந்து அடிவாரத்திற்கு இறங்குபவர்களையும், கீழ் இருந்து மேலே கோவிலுக்கு செல்பவர்களையும் தனித்தனியாக பிரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பக்தர்கள் தேக்கம் குறைந்தது.
மலையில் இருந்து இறங்கியபோது சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அங்குள்ள மருத்துவ மையத்தில் அளிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதை ஆய்வு செய்வதற்காக நேற்று பகல் 2 மணியளவில் தென்மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் தாணிப்பாறை பகுதிக்கு வந்தனர். மதுரை, விருதுநகர் மாவட்ட மருத்துவத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டன.