ராமநாதபுரம்
ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
|ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழா
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.
திருவிழாவின் முதல் நாளான நாளை காலை 10.30 மணியில் இருந்து 12 மணிக்குள் கோவிலின் அம்மன் சன்னதி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. முதல் நாளான நாளை கொடியேற்றப்பட்டு இரவு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் 9-வது நாளான வருகிற 31-ந் தேதி அன்று காலை அம்பாள் தேரோட்டமும், 11-வது நாள் திருவிழா நிகழ்ச்சியாக வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி அன்று ராமதீர்த்த தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஏற்பாடு
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி அன்று இரவு சாமி- அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி மற்றும் 17-வது நாள் நிகழ்ச்சியாக வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அன்று சாமி- அம்பாள் கெந்தமாதனபர்வத ராமர் பாத மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவடைகிறது. திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் துணை ஆணையர் தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.