ராமநாதபுரம்
ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா
|திருவாடானை சினேக வல்லிஅம்மன் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா 23-ந்தேதி தொடங்குகிறது.
தொண்டி,
திருவாடானை சினேக வல்லிஅம்மன் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா 23-ந்தேதி தொடங்குகிறது.
கொடியேற்றம்
திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் ராணி சேதுபதி ராஜேசுவரி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் உள்ளதுமான சினேகவல்லி சமேத ஆதிரெத்னேசுவரர் திருக்கோவில் உள்ளது. பாண்டிய நாட்டு தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவில் மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
இந்த கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சாமி-அம்பாள் பரிவார தெய்வங்களுடன் பல்லக்கு, காமதேனு வாகனம், அன்ன வாகனம், கிளி வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் கமல வாகனம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தீர்த்தவாரி
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 9-ம் திருநாளையொட்டி இந்த மாதம் 31-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தீர்த்தவாரி உற்சவம், திக்கு விஜயம், சாமி ரிஷப வாகனத்தில் காட்சிஅளித்தல் மற்றும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 2-ந் தேதி அம்பாள் தபசு, கதிர் குளித்தல், உல்லாச சயன அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
திருவீதி உலா
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி சாமி, அம்பாள் திருக்கல்யாணம் உற்சவம் நடை பெறுகிறது. 4-ந் தேதி ஊஞ்சல் உற்சவம், 5-ந் தேதி சுந்தரர் கைலாய காட்சி, 6-ந் தேதி மஞ்சள் விளையாட்டு, பல்லக்கில் சாமி-அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன், ஆலய குருக்கள், நாட்டார்கள், நகரத்தார்கள் செய்து வருகின்றனர்.