< Back
மாநில செய்திகள்
அடுத்தகுடி வீரசக்தி அம்மன் கோவில்  பூக்குழி திருவிழா
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அடுத்தகுடி வீரசக்தி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா

தினத்தந்தி
|
9 July 2022 8:55 PM IST

அடுத்தகுடி வீரசக்தி அம்மன்கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.

தொண்டி,

அடுத்தகுடி வீரசக்தி அம்மன்கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.

திருவிழா

திருவாடானை தாலுகா அடுத்தகுடி கிராமத்தில் மிகப் பிரசித்தி பெற்ற வீரசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூக்குழி உற்சவ விழா கடந்த மாதம் 28-ந் தேதி அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக லட்சார்ச்சனை, அன்னதானம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், முடியிறக்குதல் மாவிளக்கு வைத்தல், கும்பிடு தனம், பால்குடம் எடுத்தல், காவடி ஆட்டம், பறவை காவடி எடுத்தல் நிகழ்ச்சிகளும், பூ அள்ளிபோடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை அம்பாள் புனித தீர்த்தமாடி அக்னிக் கப்பரையுடன் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேர்த்திக்கடன்

இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்பாள் அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் புரவி எடுத்தல், அடைக்கலம் காத்த அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் மற்றும் மாட்டுவண்டி பந்தயம், வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை யொட்டி கோவில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழாவிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தனியார் போக்குவரத்து சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தது.

குதிரை வண்டி பந்தயம்

இன்று காலை குதிரை வண்டி பந்தயம் நடைபெறுகிறது. பூஜைகளை அருளாளர்கள் பொன்னும் பெருமாள், பொன்னையா, பாலகிருஷ்ணன் நடத்தினர். விழா ஏற்பாடுகளை அடுத்தகுடி கிராமத்தார்கள், சக்தி இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்