ராமநாதபுரம்
ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா
|ராமேசுவரம் கோவிலில் நடைபெற்ற ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் நடைபெற்ற ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பட்டாபிஷேகம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளில் ராவண சம்ஹாரம், 2-வது நாளான நேற்று விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கோவிலின் உள்புற வளாகத்தில் நடைபெற்றது. அதற்காக விஸ்வநாதர் சன்னதியில் இருந்து ஆஞ்சநேயர் வேடமணிந்த குருக்கள் ஒருவர் சாமி விக்ரகத்துடன் சன்னதி பிரகாரத்தில் மூன்று முறை ஆடியபடி வலம் வந்தார்.
தொடர்ந்து கோவிலின் கருவறையில் உள்ளே சென்று மண்டியிட்டு அந்த சாமி விக்ரகத்தை கருவறையில் உள்ள சிவலிங்கம் அருகே வைத்து பூஜை செய்தார். முன்னதாக கருவறையில் உள்ள ராமநாதசாமிக்கு பல்வேறு பொருட் களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
வீதி உலா
ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து இரவு சாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி ரதவீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.