< Back
மாநில செய்திகள்
திருவிடந்தை கடற்கரையில் காதல் ஜோடியிடம் கத்தி முனையில் நகை பறிப்பு; 3 பேர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருவிடந்தை கடற்கரையில் காதல் ஜோடியிடம் கத்தி முனையில் நகை பறிப்பு; 3 பேர் கைது

தினத்தந்தி
|
7 Oct 2022 2:42 PM IST

திருவிடந்தை கடற்கரையில் காதல் ஜோடியிடம் கத்தி முனையில் நகையை பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காதல் ஜோடி

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கடற்கரை பகுதியில் ஒரு காதல் ஜோடி பொழுதை கழிப்பதற்காக வந்திருந்தனர். அந்த ஜோடி அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சவுக்கு மர தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் அந்த காதல் ஜோடியிடம் கத்தியை காட்டி மிரட்டினர். காதல் ஜோடியினர் அந்த வாலிபர்களிடம் எங்களை விட்டு விடுங்கள் என கெஞ்சினர். பிறகு அந்த 3 வாலிபர்களும் கத்திமுனையில் மிரட்டி காதலனுடன் வந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு அங்கிருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

போலீசில் புகார்

இதுகுறித்து அந்த காதல் ஜோடி மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் திருவிடந்தை சோதனை சாவடி மையத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.

போலீசார் அவர்களை மடக்கி பிடித்து மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த 3 வாலிபர்களும் காதல் ஜோடியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சென்னை வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 22), கருணாகரன் (23), கார்த்திக் (25) என்பது தெரியவந்தது.

3 பேர் கைது

நண்பர்களான 3 பேரும் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, இளம்பெண்களிடம் பாலியல் சீண்டல் என பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்கள் என்பது தெரிய வந்தது.

போலீசார் அவா்களை கைது செய்து வேறு எதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்