< Back
மாநில செய்திகள்
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு: பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 42 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு
மாநில செய்திகள்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு: பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 42 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு

தினத்தந்தி
|
7 Nov 2022 11:23 PM GMT

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 42 கிலோ தங்கம், சுத்த தங்கமாக மாற்றி வங்கியில் முதலீடு செய்யப்பட்டது.

சென்னை,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு பக்தர்களால் உண்டியலிலும், காணிக்கையாகவும் செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்கள், சுத்த தங்கமாக மாற்றப்பட்டு தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) ஒப்படைக்கப்பட்டது.

இதன்மூலம் கிடைக்கப்பெறும் வட்டித்தொகை அந்தந்த கோவில்களின் மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்களிலிருந்து கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் இதர உலோகங்களை நீக்கி, நிகர பொன்னினை கணக்கிடும் பணி ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி துரைசாமி ராஜூ முன்னிலையில் நடந்தது.

42 கிலோ 991 கிராம்

கோவிலுக்கு பயன்படுத்த இயலாத நிலையில் கிடைக்கப்பெற்ற பலமாற்று பொன் இனங்கள் (தங்க நகைகள்) மொத்த எடை

42 கிலோ 991 கிராமினை சுத்த தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் வகையில், அதன் அம்பத்தூர் மண்டல மேலாளர் ராஜலட்சுமியிடம் நேற்று வழங்கினர். அதனைத்தொடர்ந்து பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் (நிர்வாகம்) இரா.கண்ணன், திருவள்ளூர் சப்-கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, வேலூர் மண்டல இணை கமிஷனர் சி.லட்சுமணன், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் என்.கே.மூர்த்தி, திருவேற்காடு நகரமன்றத்தலைவர் என்.இ.கே.மூர்த்தி, கோவில் அறங்காவலர் உறுப்பினர்கள் மற்றும் கோவில் துணை கமிஷனரும், செயல் அதிகாரியுமான ஜி.ஜெயப்பிரியா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்