< Back
மாநில செய்திகள்
திருவாரூரில் கலர் கோலப்பொடி விற்பனை மும்முரம்
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூரில் கலர் கோலப்பொடி விற்பனை மும்முரம்

தினத்தந்தி
|
16 Dec 2022 12:15 AM IST

திருவாரூரில் கலர் கோலப்பொடி விற்பனை மும்முரம்

இன்று (வெள்ளிக் கிழமை) மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு திருவாரூரில் கலர் கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

மார்கழி மாதம்

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் சிறப்புகளுடன் விசேஷங்கள் நடைபெறுவது வழக்கம். அதில் மார்கழி மாதம் என்பது பக்தி மனம் நிறைந்த மாதமாகும். இந்த மாதம் திருப்பாவை, திருவெண்பாவை பாடினால் புண்ணியம் பெறுவதுடன், விடியற்காலை கோவிலுக்கு சென்று வழிபடுவது மூலம் ஆண்டு முழுவதும் சென்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மார்கழி மாதம் என்றவுடன் நினைவுக்கு வருவது கோலங்கள் தான். சூரிய உதயத்திற்கு முன்பு அரிசி மாவால் வீட்டின் வாசலில் வண்ண கோலங்கள் போடுவது தீயசக்திகளை வீட்டிற்குள் வருவதை தடுக்கும் என்பது நம்பிக்கை. கோலம் போடுவது மனதிற்கு உற்சாகத்தையும், நினைவாற்றல் அதிகரிக்க செய்வதுடன் மன மகிழ்ச்சியும் தரும்.

ஆர்வத்துடன் வாங்கி செல்லும் பெண்கள்

மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விதவிதமாக வண்ண கோலங்கள் போட்டு நடுவில் பரங்கி பூவை வைத்து அழகுப்படுத்துவது வழக்கம். அதன்படி மார்கழி மாதம் இன்று(வெள்ளிக்கிழமை) பிறப்பதை முன்னிட்டு திருவாரூரில் பல கடைகளில் கலர் கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடந்தது. விதவிதமான கலர் கோலப் பொடிகளை பெண்கள் ஆர்வத்துடன் கடைகளில் வாங்கி சென்றனர்.

இதுகுறித்து கலர்கோலப் பொடி விற்பனையாளர் சேகர் கூறுகையில், மார்கழி மாத சிறப்பு கோலங்கள் தான். பலவித வண்ணங்களில் அனைவருடைய வீட்டு வாசலிலும் கோலங்கள் அலங்கரிக்கும். இதற்காக விடியற்காலை எழுந்து மார்கழி பனிபொழிவையும் பொருட்படுத்தாமல் கோலங்கள் போடுவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். வண்ண கோலங்கள் அதனை போடுபவர்களுக்கும் மட்டுமல்ல, அதனை காண்பவர்களுக்கும் மனதிற்கு மகிழ்ச்சியும், புத்துணர்வையும் ஏற்படுத்தும்.

இந்த ஆண்டு விற்பனை தற்போது தான் சூடுபிடித்துள்ளது. கோலமாவு 700 கிராம் ரூ. 10, கலர் பவுடர் ஒரு பாக்கெட் ரூ.5, கலருடன் கோலமாவு கலந்த பாக்கெட் ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்