< Back
மாநில செய்திகள்
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் தேரோட்டம்
கடலூர்
மாநில செய்திகள்

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
5 May 2023 6:45 PM GMT

சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்

கடலூர்

பிரம்மோற்சவ விழா

கடலூர் அடுத்த உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து ஹம்ச வாகனம், சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாளி வாகனம், அனுமந்த வாகனம், வேணுகோபாலன் சேவை, தங்க விமானம், சேஷ வாகனம், தங்கப்பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மாட வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே தேர் அசைந்து ஆடியபடி உலா வந்து நிலையை அடைந்தது. இதில் திருவந்திபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தெப்ப உற்சவம்

விழாவை தொடா்ந்து இன்று(சனிக்கிழமை) மட்டையடி உற்சவம் மற்றும் தங்க பல்லக்கில் வீதி உலா, இரவு தெப்ப உற்சவம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை துவாதச ஆராதனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்