< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து  4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் கொள்ளை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் கொள்ளை

தினத்தந்தி
|
12 Feb 2023 10:10 PM IST

திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்திரத்துக்கு தீவைத்துவிட்டு தப்பி ஓடிய கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவண்ணாமலை

ஒரே நாள் இரவில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஏ.டி.எம். எந்திரத்துக்கு தீவைப்பு

திருவண்ணாமலை நகராட்சி மணலூர்பேட்டை சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை அந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து திடீரென புகை வந்தது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கும் எந்திரம் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக அவர்கள் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரங்களில் பணம் வைக்கும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது அந்த எந்திரத்தில் இருந்த சுமார் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மற்றொரு ஏ.டி.எம். மையத்திலும் கைவரிசை

இந்த பரபரப்பு சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மற்றொரு தகவல் வந்தது.

அதாவது திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலை தேனிமலை பகுதியில் போக்குவரத்து கழக பணிமனையின் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மற்றொரு ஏ.டி.எம். மையத்திலும் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த எந்திரமும் உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த சுமார் ரூ.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமராவில் கருப்பு நிற 'ஸ்பிரே'...

தொடர்ந்து 2 ஏ.டி.எம். மையங்களிலும் போலீசார் பார்வையிட்டு சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் மீது கொள்ளையர்கள் கருப்பு நிற 'ஸ்பிரே'வை அடித்து விட்டு உள்ளே சென்று உள்ளனர்.

மேலும் அவர்கள் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி பணத்தை எடுத்துக்கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை தீவைத்து எரித்தது தெரியவந்தது.

போளூரிலும் கைவரிசை

அதேபோல் போளூர் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்திலும் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்திலும் வெல்டிங் எந்திரத்தால் வெட்டப்பட்டு அதில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு அந்த எந்திரமும் எரிக்கப்பட்டு உள்ளது தெரிந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அதில் இருந்து ரூ.18 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் வங்கி ஏ.டி.எம்.

மேலும் கலசபாக்கத்தில் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்திலும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து உள்ளனர்.

அங்குள்ள பணம் எடுக்கும் எந்திரத்தை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி எடுத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆக மொத்தம் ஒரே நாள் இரவில் 4 ஏ.டி.எம். மையங்களில் இருந்து சுமார் ரூ.72½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

போலீசார் தீவிர விசாரணை

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவம் நடைபெற்ற 4 ஏ.டி.எம். மையங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினார்.

மேலும் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் நேற்று காலை திருவண்ணாமலைக்கு விரைந்து வந்தனர்.

இதுதவிர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ்கண்ணன் (வேலூர்), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), கிரண்ஸ்ருதி (ராணிப்பேட்டை) ஆகியோரும் திருவண்ணாமலைக்கு வந்தனர். தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டுகள் கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஒவ்வொரு ஏ.டி.எம். மையங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா

ஏ.டி.எம். எந்திர தொழில்நுட்ப அலுவலர்களுடனும் போலீசார் துரித விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மட்டுமின்றி திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அத்துடன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருவண்ணாமலை சுங்கச்சாவடியில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளிமாநில கும்பல்

இதற்கிடையே ஏ.டி.எம். மையங்களை பார்வையிட்ட வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறியதாவது:-

அரியானா போன்ற வெளிமாநில கொள்ளை கும்பல் இந்த சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். புதிய ரக ஏ.டி.எம். பணம் எடுக்கும் எந்திரங்களை முழுமையாக கையாள தெரிந்து வைத்துள்ளவர்கள்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறோம். கொள்ளையர்கள் குழுவாக வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம். இந்த சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் வெளிமாவட்ட போலீசாரும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மற்றொரு தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் வெளிமாநிலம் சென்று உள்ளனர். 4 ஏ.டி.எம். மையங்களில் இருந்து சுமார் ரூ.72 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திரா மற்றும் கர்நாடகா போலீசாருடன் சேர்ந்து கொள்ளையர்களை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் முதல் முறை

மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற கொள்ளை தமிழகத்தில் முதல் முறையாக நடந்து இருப்பதாக வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறினார். கொள்ளை நடந்த 4 ஏ.டி.எம். மையங்களிலும் இரவு நேர காவலாளிகள் இல்லை.

காரில் வந்த கொள்ளையர்கள்

கொள்ளையர்கள் கள்ளக்குறிச்சி சாலை வழியாக காரில் வந்து முதலில் திருவண்ணாமலை தேனிமலை ஏ.டி.எம். மையத்திலும், 2-வதாக மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்திலும், 3-வதாக கலசபாக்கத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்திலும், தொடர்ந்து போளூரில் உள்ள ஏ.டி.எம். மையத்திலும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக கொள்ளையர்கள் ஆந்திர மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்றும் போலீசார் யூகிக்கின்றனர். ஆந்திரா அல்லது வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதி இந்த வழித்தடத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

வாகன சோதனை தீவிரம்

ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க வாணியம்பாடியில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் திருவண்ணாமலையில் இருந்து ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இதேபோல் அண்டை மாநில எல்லைப்பகுதியிலும், தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை சம்பவத்திலும் தொடர்பா?

சென்னை நகைக்கடையிலும் இரும்பு ஷட்டர் கதவை கொள்ளையர்கள் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டிதான் கைவரிசை காட்டி உள்ளனர்.

ஏ.டி.எம். கொள்ளையிலும் வெல்டிங் எந்திரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்த 2 கொள்ளை சம்பவத்திலும் ஒரே கும்பல்தான் ஈடுபட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்