திருவண்ணாமலை
தெருக்கூத்து பிறந்த மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று
|தெருக்கூத்து பிறந்த மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று என்று மாவட்ட அளவிலான கலை விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
தெருக்கூத்து பிறந்த மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று என்று மாவட்ட அளவிலான கலை விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
மாவட்ட அளவிலான கலை விருது
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு கலை விழாவில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருதுகள் மற்றும் பரிசு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி பேசியதாவது:-
கலைஞர் நூற்றாண்டுவிழா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் கொண்டாடப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கலைஞருக்கு மட்டும் தான் கலைஞர் என்ற பட்டம் அவருடைய பெயருடன் நிரந்தரமாக நிலைத்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஆற்றல் உண்டு. ஆனால் கலைஞர் கருணாநிதி மட்டும் தான் பன்முக ஆற்றலைக் கொண்டிருக்கிறார். இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தமிழையும் அவர் அறிந்திருக்கின்ற காரணத்தினால் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று தலைவர் கருணாநிதியை அழைக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டம் மட்டும் தான் கலைஞர்கள் அதிகமாக கொண்ட மாவட்டமாக திகழ்கிறது. கலைகள் அனைத்துக்கும் அடிப்படையானது தெருக்கூத்து தான். தெருக்கூத்து பிறந்த மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்றாகும். இந்த தகவல்கள் பல்வேறு சரித்திர கல்வெட்டுகளில் உள்ளது.
மேலும் நமது மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் வட்டத்தில் புரசை என்ற ஊரில் வெளிநாட்டவர்கள் எல்லாம் வந்து தெருக்கூத்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கலை என்பது தாய்ப்பால் போன்றது. நமது உடலிலே பிறப்பதாகும். நமது இயல்பிலேயே இருக்கும் கலையை பயிற்சி மூலமாக மேம்படுத்திக் கொள்ளலாம். கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்தி கொண்டிருக்கிறார். கலைஞர்கள் அனைவரும் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கலை போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த சண்டிகர், ஜெய்பூர் மற்றும் இந்தியாவை கடந்து மலேசியாவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பாகவும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தற்போது இவ்விழாவில் மூத்த 7 கலைஞர்களுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் இளம்கலைஞர்கள் 28 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 45 அயிரம் என மொத்தம் 35 கலைஞர்களுக்கு ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலைஞர்களுக்கு விருது
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைத்துறையில் சாதனைப்படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை முதுமணி, கலை நன்மணி, கலைச் சுடர்மணி, கலை வளர்மணி, கலை இளமணி உள்ளிட்ட விருதுகள் 35 கலைஞர்களுக்கும், இளம் கலைஞர்களின் கலைத்திறமைகளை வெளிக் கொணரும் வகையில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமியக் கலைகள், மற்றும் இசைக்கருவிகள், இசைத்தல் ஆகிய பிரிவுகளில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 கலைஞர்கள் தேர்வு பெற்றனர். மேலும் ஜவகர் சிறுவர் மன்ற கலை போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு 5 வயது முதல் 16 வயது வரை உள்ள பிரிவுகளில் போட்டியில் வெற்றி பெற்ற 34 மாணவர்களுக்கு பரிசு மற்றும் விருதுகளை அமைச்சர் வழங்கினார்.
விழாவில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் பா.ஹேமநாதன். தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிளாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரியம் உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கே.கலைவாணி கலைமணி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் டி.ரமணன், தி.மு.க.நிர்வாகிகள் பிரியா விஜயரங்கன், அருணை வெங்கட், ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.