< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரெயில் சேவை திடீர் ஒத்திவைப்பு
மாநில செய்திகள்

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரெயில் சேவை திடீர் ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
2 May 2024 12:03 PM IST

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பயன்பெறும் நோக்கில், பாஸ்ட் மின்சார ரெயில் சேவை மே 2-ம் தேதியில் இருந்து வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியானது.

சென்னை,

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின்சார ரெயில் பாஸ்ட் மின்சார ரெயில் ஆகும். சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரெயில், வேலூர் கண்டோன் மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. சென்னையில தினமும் வேலைக்கு சென்று வர இந்த மின்சார ரெயிலை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பாஸ்ட் மின்சார ரெயில் என்பதால் முக்கியமான ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

இந்தநிலையில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில் சென்னை கடற்கரை - வேலூர் கன்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டுவரும் மெமு ரெயில் (06033/06034) மே 2 ஆம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என்று திங்கள்கிழமை காலை தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலையில் இருந்து மின்சார ரெயில் புறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடாமல் சேவையை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ரெயில் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

மேலும் செய்திகள்