திருவள்ளூர்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 16 ஆண்டுகள் சிறை - திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
|சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் பலராம் சிங் (வயது 69). கடந்த 2018-ம் ஆண்டு பலராம் சிங் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமியின் தாயார் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பலராம் சிங்கை கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட பலராம் சிங் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து முதியவர் பலராம் சிங் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி சுபத்ராதேவி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து பலராம் சிங்குக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.