< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கு: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் விசாரணை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கு: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் விசாரணை

தினத்தந்தி
|
29 July 2022 3:16 PM IST

பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டார்.

திருவள்ளூர்,

மாணவி தற்கொலை

திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 மாணவி சரளா (வயது 17) கடந்த 25-ந் தேதி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், டி.ஐ.ஜி. சத்யப்பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் ஆகியோர் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

பின்னர், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. துணை-போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த குழுவினர் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், விடுதி வார்டன், மற்றும் சக மாணவிகளிடம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

அறிக்கை தாக்கல்

அதை தொடர்ந்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மாணவியின் சகோதரர், உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளி மாணவியின் மரணம் குறித்து காலை பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொண்டோம். பள்ளியின் நிர்வாகி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டோம். இது சம்பந்தமாக ஏற்கனவே விசாரணை செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டர் மற்றும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் குழு ஆகியோரிடமும் தகவல்களை சேகரித்துள்ளோம்.

மேலும், மாணவியின் உறவினர்களிடமும் மரணம் சம்பந்தமான சந்தேகங்களையும் கேட்டறிந்தோம். விடுதியில் மேற்கொண்ட விசாரணையில் குழந்தைகள் உரிமை மீறல் சம்பவம் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. இது சம்பந்தமான முழு அறிக்கையும் விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்