< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்: மீனவ கிராமங்களுக்கு இடையே தகராறு - பிரச்சினைக்கு தீர்வு காண சப் கலெக்டர் உறுதி
மாநில செய்திகள்

திருவள்ளூர்: மீனவ கிராமங்களுக்கு இடையே தகராறு - பிரச்சினைக்கு தீர்வு காண சப் கலெக்டர் உறுதி

தினத்தந்தி
|
30 Nov 2022 7:03 PM IST

கிராம மக்களிடம் நாளை பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என சப் கலெக்டர் ஐஸ்வர்யா உறுதியளித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சில கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கடலிலும், சில கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.

இதனிடையே கூனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பாரம்பரியமாக கடலிலும், வாரத்திற்கு இரண்டு முறை பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடித்து வந்துள்ளனர். இதனையடுத்து ஆண்டிக்குப்பம், நடுவூர் உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூனாங்குப்பம் மீனவர்கள் ஏரியில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கூனாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏரியில் மீன்பிடிப்பதால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மற்ற கிராம மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக கூனாங்குப்பம் கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இதனையடுத்து கூனாங்குப்பம் கிராம மக்கள் தங்கள் அரசு ஆவணங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து ஊரை விட்டு வெளியேறுவதாக தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக சப் கலெக்டர் ஐஸ்வர்யா கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளைய தினம் குறிப்பிட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து கிராம மக்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

மேலும் செய்திகள்