< Back
மாநில செய்திகள்
தியாகராஜர் ஆராதனை விழா.. பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்
மாநில செய்திகள்

தியாகராஜர் ஆராதனை விழா.. பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்

தினத்தந்தி
|
30 Jan 2024 6:46 PM IST

தியாகராஜ சுவாமிகளுக்கு பல்வேறு மங்கள பொருட்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமிகளின் சமாதி வளாகத்தில் ஆண்டுதோறும் ஆராதனை விழா நடைபெறுகிறது. அவ்வகையில் தியாகராஜர் சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு பாடியும், இசை கருவிகளை இசைத்தும் தியாகராஜர் சுவாமிகளுக்கு இசைஅஞ்சலி செலுத்தினர்.

விழாவின் நிறைவு நாளான இன்று காலை திருவையாறு திருமஞ்சனவீதியில் தியாகராஜர் சுவாமிகள் வாழ்ந்த வீட்டில் உள்ள அவருடைய சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு உஞ்சவிருத்தி பஜனை பாடியபடியும், மேளதாளங்கள் முழங்கவும் முக்கிய வீதிகள் வழியாக விழா பந்தலுக்கு தியாகராஜர் சுவாமிகளின் சிலை எடுத்து வரப்பட்டது. பின்னர் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து 9 மணி முதல் 10 மணி வரை பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்பட்டு தியாகராஜர் சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பிரபல இசை கலைஞர்கள் சுதா ரகுநாதன், மகதி, நித்யஸ்ரீ மகாதேவன், ஓ.எஸ்.அருண், கடலூர் ஜனனி, திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட 500-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசை கருவிகளை இசைத்தும் தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது தியாகராஜ சுவாமிகளுக்கு பல்வேறு மங்கள பொருட்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்