விவசாயிகளின் போராட்டத்தையும் மீறி திருவையாறில், புறவழிச்சாலை அமைத்தால் நான் தடுத்து நிறுத்துவேன் - சீமான்
|விவசாயிகளின் போராட்டத்தையும் மீறி புறவழிச்சாலை அமைக்க வந்தால் நான் வந்து தடுத்து நிறுத்துவேன் என்று சீமான் கூறினார்.
விளைநிலங்களில் புறவழிச்சாலை
தஞ்சை மாவட்டம் திருவையாறில் ரூ.191 கோடியில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை-பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக கண்டியூர், திருவையாறு, பெரும்புலியூர், கல்யாணபுரம் உள்ளிட்ட 6 கிராமங்களின் வழியே சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களின் வழியாக அமைக்கப்படுகிறது.
விளைநிலங்களில் புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியூரில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீமான் ஆதரவு
இந்த நிலையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விளைநிலங்களில் போடப்படும் சாலை பணிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உயிரோடு புதைத்துள்ளனர்
அரசு பயிர்களை மட்டும் கொல்வதாக நினைக்கிறது. ஆனால் ஆயிரக்கணக்கான உயிர்களை படுகொலை செய்திருக்கிறது. பயிர் இல்லை என்றால் உயிர் இல்லை.
40 நாட்கள் முதல் 50 நாட்கள் விளைந்த பயிர்களை, கர்ப்பிணி பெண்களைப்போல் உயிரோடு புதைத்துள்ளனர். பச்சிளம் குழந்தைகளை உயிரோடு போட்டு புதைத்தது போல, இரும்பு கைகளை கொண்டு மண்அள்ளி போட்டு மூடி உள்ளனர்.
சாலை போட அவசியம் என்ன?
தஞ்சாவூர் நன்றாக விளைந்தால் தமிழகம் முழுவதும் சோறு போடலாம். தமிழகம் முழுவதும் நன்றாக விளைந்தால் உலகத்துக்கே சோறு போடலாம் என்பது முன்னோர் மொழி. அந்த தஞ்சையில் விளைநிலங்களை அழித்து இந்த சாலை போட அவசியம் என்ன?. இதற்கு முதன்மையான காரணம் காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி ஆறுகளில் இருந்து வசதியாக மண் அள்ளி கொண்டு செல்வதற்காக.
முதன்மை சாலையில் லாரிகள் மணலை கொண்டு போகும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. அதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது. இந்த புறவழிச்சாலை மூலம் மணலை திருடி கொண்டு செல்வதற்காக தான் இந்த சாலை அமைக்கப்படுகிறது. மக்களின் பயன்பாட்டிற்காக இந்த சாலை அமைக்கப்படுகிறதா? என்பதை இந்த திட்டத்தை தொடங்கி வைத்தவர்கள் கூறட்டும்.
நான் தடுத்து நிறுத்துவேன்
மணல் திருட்டுக்காக போடப்பட்ட சாலையை எப்படி மக்கள் பொறுத்துக் கொள்வார்கள். இந்த சாலை அ.தி.மு.க. ஆட்சியில் போட்டு இருந்தால், நீங்கள்(தி.மு.க.) எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன பாடு படுத்தி இருப்பீர்கள். விளை நிலத்தை அழித்து சாலை போடுபவர்கள் ராஜபக்சேவை விட கொடுமையானவர்கள். விவசாயிகளின் போராட்டத்தையும் மீறி சாலை அமைக்க வந்தால் நான் வந்து தடுத்து நிறுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.