< Back
மாநில செய்திகள்
திமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என சொன்னவர் திருப்பூர் துரைசாமி: வைகோ விமர்சனம்
மாநில செய்திகள்

திமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என சொன்னவர் திருப்பூர் துரைசாமி: வைகோ விமர்சனம்

தினத்தந்தி
|
30 May 2023 8:57 PM IST

ம.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி வைகோ மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் எந்த உண்மையும் இல்லை என்றும், வரவு-செலவில் என் நாணயத்தை குறைசொல்ல முடியாது என்றும் வைகோ தெரிவித்தார்.

சென்னை,

ம.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி, கட்சியின் வாழ்நாள் உறுப்பினர் உள்பட எல்லா பொறுப்புகளிலும் இருந்து விடுவித்துக் கொள்வதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், வைகோ மீது பல குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் திருப்பூர் துரைசாமி வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முயற்சி நடந்தபோது, திருப்பூர் துரைசாமி கூட்டணி வைக்கக்கூடாது என்று தடுத்து நிறுத்தினார். தி.மு.க. வெற்றி பெறாது என்று கூறினார். கட்சியின் கூட்டத்திலேயே இதை பேசினார். ஆனால் மற்றவர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்கள்.

தி.மு.க.வுடன் உடன்பாடு எப்போதும் கூடாது என்று துரைசாமி திட்டவட்டமாக கூறிவந்தார். இப்போது தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று அவர் சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் வெளியே வந்துவிட்டேன் என்று அவர் கூறுகிறார். அன்று சொன்னதற்கு நேர்மாறாக இன்று அவர் நடந்து கொள்கிறார். இப்படிப்பட்ட நிலையில், தி.மு.க.வுடன் நாங்கள் உடன்பாடு வைத்தோம். இது அவருக்கு பிடிக்கவில்லை. தேர்தல் பணிகளை செய்யவேண்டாம் என்றும் பலரிடம் சொல்லியுள்ளார். தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றியும் பெற்றது.

கட்சியினர் எல்லோரும் துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினார்கள். நான் மறுத்து பேசினேன். கண்டிப்பாக வரவேண்டும் என்று அவர்கள் பேசினர். பெரும்பான்மையை மறுக்கக்கூடாது என்று துரை வைகோ அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்பது தொடர்பான ரகசிய வாக்கெடுப்பு நடத்தினோம். அதிலும் ஓரிருவரை தவிர, பெரும்பாலானோர் வரவேண்டும் என்று கூறினார்கள். அதன் அடிப்படையில் துரை வைகோ கட்சி பணியை ஆரம்பித்தார்" என்றார்.

மேலும் செய்திகள்