செங்கல்பட்டு
5 ஆண்டுகளாகியும் முடிவடையாத திருப்போரூர்- கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணி; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
|5 ஆண்டுகளாகியும் முடிவடையாத திருப்போரூர்- கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7½ கிலோமீட்டர் சாலை
பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைவாக செல்லவும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கடந்த 2017 -ம் ஆண்டு ரூ.250 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆலத்தூர் ஊராட்சி வெங்கலேரி கிராமத்தில் இருந்து காலவாக்கம் தனியார் கல்லூரி வரை 5 கிலோமீட்டர் தூரம் மற்றும் தையூர் ஊராட்சி செங்கன்மால் பகுதியில் இருந்து படூர் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 7½ கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
கடந்த 2020-ம் ஆண்டு இந்த சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். இடையில் கொரோனா காலகட்டம், ஆட்சி மாற்றம் போன்றவற்றால் இந்த புறவழிச்சாலை பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்தன. வெங்கலேரி முதல் காலவாக்கம் தனியார் கல்லூரி வரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
கோரிக்கை
இந்த பணிகள் நிறைவு பெறும் முன்னரே இந்த சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்போரூர் நகரத்துக்குள் வராமல் இந்த புறவழிச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயண நேரம் குறைவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தையூர் செங்கண்மால் பகுதியில் இருந்து படூர் வரை 2½ கிலோ மீட்டர் தூரத்தில் அமைய உள்ள சாலையில் ஒரு மேம்பாலம் அமைகிறது.
இதில் படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெறவில்லை. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தால் இந்த பகுதியில் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு குறித்த நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைவர். மந்தகதியில் நடைபெறும் திருப்போரூர்-கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.