< Back
மாநில செய்திகள்
5 மாநிலங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி போட்டி - திருமாவளவன்
மாநில செய்திகள்

5 மாநிலங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி போட்டி - திருமாவளவன்

தினத்தந்தி
|
21 Feb 2024 1:24 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தலைமை தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் கமிஷனில் நேற்று ஒரு மனு அளித்தார். அதில் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளா ஆகிய தென் இந்திய மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். எனவே எங்கள் கட்சிக்கு பானை சின்னத்தை முன்கூட்டியே ஒதுக்கித்தர வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை தேர்தல் கமிஷனில் அளித்து இருக்கிறோம்.

எங்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. சரத்பவார் சொல்லியிருக்கிற கருத்து புறந்தள்ளக்கூடியது அல்ல. சமீபகாலமாக தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள், ஆளுங்கட்சியின் தலையீடு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

தேர்தல் கமிஷன் ஒரு தன்னாட்சி அமைப்பு. அது சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று சரத்பவார் மட்டுமல்ல, அனைவரும் எதிர்பார்க்கிறோம். பாகுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளிலும் பானை சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிட்டோம். அப்போது தி.மு.க. எந்த நெருக்கடியையும் எங்களுக்கு தரவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் வேறு கருத்தை வைத்தது உண்மை. அப்போது வெற்றியை மட்டுமே கருத்தில்கொண்டு அந்த ஆலோசனை வழங்கப்பட்டதே தவிர, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அது செயல்படவில்லை. எனவே அது இப்போதைக்கு ஒரு பிரச்சினை இல்லை என்பது எங்களது கருத்து.

பொதுத்தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடக்கூடாது என்று ஏதேனும் வரையறை உள்ளதா?. நாங்களும் ஒரு அரசியல் கட்சி. அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். 2001-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் பொதுத்தேர்தலின்போது அதை முன்வைத்து வருகிறோம். எனவே இது புதிய கோரிக்கை அல்ல. சட்டமன்ற தேர்தலில் 2 பொது தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதே அடிப்படையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பொதுதொகுதி ஒன்றை கேட்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்