ராணிப்பேட்டை
திருமாவளவன் எம்.பி. பிறந்த நாள் விழா
|ராணிப்பேட்டை மத்திய மாவட்டத்தின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள்விழா கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
61 கிலோ கேக்
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் எம்.பி.யின் 61-வது பிறந்த நாள் விழா ராணிப்பேட்டை மத்திய மாவட்டம் சார்பில் கொண்டாடப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளரும், நகரமன்ற துணைத்தலைவருமான சீ.ம.ரமேஷ்கர்ணா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கட்சி கொடியின் வர்ணத்தில் 61 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டி நிர்வாகிகளும், பொதுமக்களும் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.
தொடர்ந்து 600 மகளிருக்கு இலவச சேலைகளும், 1,000 பேருக்கு மட்டன் பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.
கல்வி ஊக்கத்தொகை
மேலும் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக காரை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதலிடம் பிடித்த பிரியன் மற்றும் கோமதி ஆகியோருக்கு சைக்கிள்களும், இரண்டாம் இடம் பிடித்த சந்தனபிரியன், இலக்கியா ஆகியோருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. தொடர்ந்து ராணிப்பேட்டை, சிப்காட், வேப்பூர், அம்மூர் ஆகிய பகுதிகளில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை செயலாளர் தமிழ், முன்னாள் மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ், மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார், ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜா, ராணிப்பேட்டை நகர செயலாளர் ராஜசேகர், துணை செயலாளர்கள் ஹரி, சுரேஷ், நகரமன்ற உறுப்பினர் நரேஷ், தொகுதி துணை செயலாளர் சுரேஷ், மாநில பொறுப்பாளர்கள் பெல்.சேகர், ராமச்சந்திரன், தலித் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.