< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் பொறியியல் பட்டதாரி வாலிபர் வெட்டி படுகொலை: திருமாவளவன் கண்டனம்
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் பொறியியல் பட்டதாரி வாலிபர் வெட்டி படுகொலை: திருமாவளவன் கண்டனம்

தினத்தந்தி
|
31 Dec 2023 9:13 PM IST

பேரிடர் துயரச் சூழலிலும் சாதி வெறியர்கள் இவ்வாறு படுகொலை செய்வது அதிர்ச்சியளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் அருகே உள்ள மேல புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துபெருமாள் (30). இவர் கருங்குளம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், திருநெல்வேலி பெருமாள்புரம் ஜான்சன் நகர் பகுதியில் முத்துபெருமாள் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரை ஒரு கும்பல் வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த முத்துபெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற பெருமாள்புரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், புளியங்குளத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான முத்துபெருமாள் என்பவரைச் சாதிவெறிக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது. புயல், மழை, வெள்ளப் பாதிப்பிலிருந்து இன்னும் அம்மாவட்டங்கள் மீளவில்லை. இத்தகைய பேரிடர் துயரச் சூழலிலும் சாதி வெறியர்கள் இவ்வாறு படுகொலை செய்வது அதிர்ச்சியளிக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடரும் இத்தகைய படுகொலைகளைத் தடுத்திட அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், நேர்மை திறத்துடன் பணியாற்றும் அதிகாரிகளை அப்பகுதிகளில் நியமித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்