< Back
மாநில செய்திகள்
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா:தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக தி.மு.க.வின் நிலைப்பாடு இருக்கிறது கிருஷ்ணகிரியில், திருமாவளவன் எம்.பி. பேட்டி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா:தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக தி.மு.க.வின் நிலைப்பாடு இருக்கிறது கிருஷ்ணகிரியில், திருமாவளவன் எம்.பி. பேட்டி

தினத்தந்தி
|
23 April 2023 12:17 AM IST

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதாவானது, தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான தி.மு.க.வின் நிலைப்பாடாக இருக்கிறது என்று கிருஷ்ணகிரியில் திருமாவளவன் எம்.பி. கூறினார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அருணபதியில் நடந்த ஆணவ படுகொலையை கண்டித்தும் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், பாலாஜி எம்.எல்.ஏ., மண்டல செயலாளர் நந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆணவ கொலைகள்

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆணவ கொலைகள் தொடர்ந்து நடைபெறும் மாவட்டமாக உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற சாதி ஆணவ கொலைகள் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவிலும் ஆணவ கொலைகள் நடந்து வருகிறது.

ஆனால் மத்திய அரசு ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை இயற்றுவதில் தயக்கம் காட்டி வருகிறது. எனவே தமிழக அரசு ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்.

கொள்கைகளுக்கு எதிரானது

தமிழக சட்டசபையில் தொழிலாளர்களுக்கு விரோதமான ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 8 மணி நேரம் வேலை என்ற தொழிலாளர்களின் உரிமையை பறிக்கிற வகையில் 12 மணி நேர வேலை என்ற ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்னும் சொல்ல போனால் தி.மு.க.வின் இந்த நிலைப்பாடு தொழிலாளர்களின் நலனுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நலனுக்கான கொள்கைகளுக்கு எதிராகவும் இருக்கிறது. எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும் கூட்டணி கட்சிகள் சார்பில் முதல்-அமைச்சரை சந்தித்து மசோதா குறித்து தங்களது கருத்துக்களை வலியுறுத்த இருக்கிறோம்.

காங்கிரசுக்கு ஆதரவு

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடும். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நானும் பிரசாரம் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கிருஷ்ணகிரி அருகே கவுரவ கொலை செய்யப்பட்ட ஜெகனின் பெற்றோர் மற்றும் ஊத்தங்கரை அருணபதி கிராமத்தில் ஆணவ கொலை செய்யப்பட்ட சுபாசின் மனைவி அனுசுயா குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது. அதன்படி ரூ.2 லட்சத்தை ஜெகனின் பெற்றோரிடமும், ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்தை சுபாசின் மனைவி அனுசுயாவின் பெற்றோரிடமும் திருமாவளவன் ஆர்ப்பாட்டம் நடந்த மேடையில் வழங்கினார்.

இதில் சேலம் மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் காயத்ரி, தலைமை நிலைய செயலாளர் உஞ்சை அரசன், மாநில துணை செயலாளர் ஆதிமொழி, ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில செயலாளர் பாவேந்தன், நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் குபேந்திரன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் அசோகன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், தர்மபுரி மாவட்ட துணை செயலாளர் மின்னல் சக்தி, மேற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பாரதிராஜா, மாநில துணை செயலாளர்கள் கிள்ளிவளவன், கப்பல் செந்தில்குமார், அதியமான், மாவட்ட அமைப்பாளர்கள் ஆசிரியர் இளவரசன், அம்பேத்வளவன், மாது, தொகுதி அமைப்பாளர் முரளி, ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட துணை அமைப்பாளர் தென்பாண்டி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலட்சுமி மகாலிங்கம், மாவட்ட துைண செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்