< Back
மாநில செய்திகள்
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில் தேரோட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
5 March 2023 6:34 PM GMT

மாசிமக பெருவிழாவை முன்னிட்டு திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமழபாடி கிராமத்தில் தமிழ்நாடு சுற்றுலா தலமான சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக்கோவில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடப்பெற்ற கோவிலாகும். பொன்னார் மேனியனே என்ற பாடல் இக்கோவிலுக்காக பாடப்பட்ட மிகவும் பிரபலமான பாடலாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று மாசிமக பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக ஆதிசேஷ வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், காமதேனு வாகனம் ஆகியவற்றில் சுவாமிகள் ஊர்வலமாக வந்தனர். இந்த நிலையில் நேற்று தேரோட்டத்தையொட்டி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்

பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமியை எழுந்தருள செய்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் இப்பகுதியைச் சுற்றியுள்ள கண்டிராதித்தம், இலந்தைகூடம், செம்பியக்குடி, குலமாணிக்கம், பாளயபாடி, அரண்மனைகுறிச்சி, திருமானூர், கீழகவட்டாங்குறிச்சி, சேனாபதி முடிகொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்தனர்.

கோவிலின் முன்பிருந்து தொடங்கப்பட்ட இத்தேரோட்டம் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி திருட்டு உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) நடராஜர் புறப்பாடு, இடப வாகன காட்சி மற்றும் கொடியை இறக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும் செய்திகள்